Sunday, 4 January 2015

திருவான்மியூர்

திருவான்மியூர்

சிவமயம்

பெயர்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்: மருந்தீஸ்வரர் (சுயம்பு)
தாயார்: திரிபுர சுந்தரி அம்மன்

பிற பெயர்கள்(மூலவர்): பால்வண்ண நாதர்
பிற பெயர்கள்(தாயார்): சுந்தரமாது ,சொக்கநாயகியம்மை.
தல விருட்சம்: வன்னி மரம்


தீர்த்தம்:பஞ்ச தீர்த்தம்
வரலாறு :
வால்மீகி முனிவருக்கு ஈசன் காட்சி தந்த தலம் என்பதால் வான்மீகியூர் என்று வழங்கபெற்று  தற்போது திருவான்மியூர் என அழைக்க பெறுகிறது.






இத்தலத்து இறைவனின் பெயர்க்காரணங்கள்:

பாடல் வகை:
தேவாரம் (2.4 திருவான்மியூர்) (திருஞானசம்பந்தர் )

திருவான்மியூர் ( பண் - இந்தளம் )  

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.

சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்
சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.    

கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.    

மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்
துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.

மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.

போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந்
தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.

வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.

தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.

பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்
சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே.

மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.

மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே.



தேவாரம் (3.055 திருவான்மியூர்) (திருஞானசம்பந்தர் )
திருவான்மியூர் (பண் - கௌசிகம்)

விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய் உமைநங்கையோர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும்
அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே.

இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய்
கொடியார் மாமதியோ டரவம்மலர்க் கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ் திருவான்மி யூருறையும்
அடிகேள் உன்னையல்லால் அடையாதென தாதரவே.

கையார் வெண்மழுவா கனல்போல்திரு மேனியனே
மையார் ஒண்கண்நல்லாள் உமையாள்வளர் மார்பினனே
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூருறையும்
ஐயா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
தென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மி யூருறையும்
அண்ணா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

நீதீ நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்தலை யொன்றினையுஞ்
சேதீ சேதமில்லாத் திருவான்மி யூருறையும்
ஆதீ உன்னையல்லால் அடையாதென தாதரவே.

வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவருங்
கானார் ஆனையின்தோல் உரித்தாய்கறை மாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ் திருவான்மி யூருறையும்
ஆனா யுன்னையல்லால் அடையாதென தாதரவே.

பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்
நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மி யூருறையும்
அறிவே யுன்னையல்லால் அடையாதென தாதரவே.

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்
திண்டேர் வீதியதார் திருவான்மி யூருறையும்
அண்டா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்
நன்றா னபுகழான் மிகுஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி யூரதன்மேற்
குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே.

திருச்சிற்றம்பலம்



திருவான்மியூர் - திருக்குறுந்தொகை (அப்பர்)

விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.
   
பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.

மந்த மாகிய சிந்தை மயக்கறுத்
தந்த மில்குணத் தானை யடைந்துநின்
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே.

உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற்
கள்ள முள்ள வழிக்கசி வானலன்
வெள்ள முமர வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே.

படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.    

நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக்
குணங்கள் தாம்பர விக்குறைந் துக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுரு வாய பரமனென்
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர்
வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங்
காட்டில் வேவதன் முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

பார மாக மலையெடுத் தான்றனைச்
சீர மாகத் திருவிர லூன்றினான்
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
வார மாயினன் வான்மியூ ரீசனே.





திருவான்மியூர் ரயில் நிலைத்துலிருந்து சுமார் 1.5 KM கிழக்கே அமைந்துள்ளது.

திருவான்மியூர்  பேருந்து நிலையம் அருகில்.

வழி:


கோவில் அமைப்பு:

மூலவர் சன்னதியில்:
மூலவர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்,
சூரியன்-இங்கு ஸ்ரீ சக சிவ சூரியன் என்று குறிப்பிடபடுகிறது
சைவ குரவர் நால்வர்.63 நாயன்மார்கள் உற்சவர் உடன் 108 சிவலிங்ககள்.
கேதரீஸ்வரர்,சுந்தரேஸ்வரர்,அருணாசலேஸ்வரர்.
பைரவர்
தாயார் தென் திசை நோக்கி காட்சி தருகிறார்.

விநாயகர்-விஜயகணபதி தனி சன்னதி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்
வள்ளி தெய்வானையுடன் முருக பெருமானுக்கு தனி சன்னதி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
3-கணபதி  தாயார் சன்னதி எதிரே.
கோயிலின் கிழக்கு கோபுர வாசல் முன்னே தெப்பகுளமும், உள்ளே ஒரு சிறிய தடாகமும், நந்தவனம் கோயிலுக்கு உள்ளேயேயும் அமைந்துள்ளது








வன்னி,தென்னை,அசோகா,தேக்கு,செம்பருத்தி,பவளமல்லி,
சீதா,மூங்கில்,மகிழ மரம் மற்றும் பல தாவர வகைகள் உள்ளன.

காலைச்சந்தி,உச்சி காலம்,சாயரட்சை,அர்த்த ஜாமம்,பள்ளியறை
என 5 வேலை பூஜை நடைபெறுகிறது.

பயண அனுபவம்: 

ஒவ்வொரு சனி கிழமையும் சிவாலயம் நடைபாதயாக செல்வது எனது வழக்கம் , 03-01-2015 சனி கிழமை,திருக்கச்சூர் செல்லாம் என முடிவு செய்திருந்தேன் ஆனால் பணியின் காரணமாய் அலுவலகம் அருகில் உள்ள திருவான்மியூர் சென்றேன்.,

அன்று இரவு அர்த்த ஜாம பூஜையில் கலந்துகொண்டேன்.
பூஜையின்போது குடியிருந்த பக்தர்கள்  சிவவாக்கியாரின் சிவவாக்கியம் சித்தர் பாடலை பாடினார்கள்.



சிவவாக்கியம் 

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.     3

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.     6

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!     12

இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே?     53

உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும்அல்ல கந்தம்அல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும்ஆவி தானும்அல்ல
அரியதாக நின்றநேர்மை யாவர்காண வல்லரே.     187

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்;
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.     79

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.     2

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.     7

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?     26

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ?
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ?
செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே.     43

மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்;
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்;
தோன்றும்ஓர் எழுத்துளே சொல்லஎங்கும் இல்லையே!     99


நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே!
நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!     104

இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்,
இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ?
இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே.     116

காரகார காரகார காவல்ஊழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.     117

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்துவாழ்வ துண்மையே.     121

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.     406

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானேதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே.     486

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!     109


இந்த பாடலின் பிரதியை எம்.எல்.விரா டிஜிட்டல் கிராபிக்ஸ் சென்னை -96 இலவசமாக பக்தர்களுக்கு வழங்கினார், அவர்களுக்கு எனது நன்றி.

பின் மருந்தீஸ்வரர் பால் அபிஷேகம் கண்டேன்.

பின் பக்தர்கள் மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் பாடலை பாடினார்கள்.

பள்ளியறை பூஜையுடன் கோவில்  மூடப்பட்டது.