திருவூறல்
சிவமயம்
பெயர்: திருவூறல்
மூலவர்:ஜலநாதேஸ்வரர்
தாயார்:கிரிராஜகன்னிகாம்பாள்
தல விருட்சம்:
தீர்த்தம்: கங்கை தீர்த்தம்
வரலாறு :
பாடல் வகை:
மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில்
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே.
மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால்
மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே.
ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங்
கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே.
நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின்
மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே.
எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந் திருவூறலை உள்குதுமே.
இப்பதிகத்தில் 6,7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி
மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று
ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே.
நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே.
பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே
கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச
ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.
சுவாமிபெயர் - உமாபதீசுவரர், தேவியார் - உமையம்மை.
திருச்சிற்றம்பலம்
கோவிலின் அமைப்பு:
கோவிலின் மேற்கே உள்ள ராஜகோபுரமே இக்கோவிலின் பிரதான நுழைவாயிலாகும். வாயிலின் இடப்பக்கம் விநாயகர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளார். விநாயகரை வழிபட்டு வலம் வர வடகிழக்கு மூலையில் கோவில் குளம் காணபடுகிறது. தொடர்ந்து வலம் வர கிழக்கில் துவஸ்தம்பம் அருகே மாட்டு தொழுவம் உள்ளது.
தொடர்ந்து வலம் வர தாயார் கிரிராஜகன்னிகாம்பாள் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.
உடன் எதிரே ஐயன் சன்னதிக்கு செல்லும் பிரகாரம். பிரகார வாயில் அருகே தர்மசாஸ்தா சன்னதி. மற்றும் தெற்கு நோக்கி நடராஜ பெருமான் சன்னதி.
ஐயன் சன்னதி வாயில் அருகே இடப்பக்கம் சூரியன் வலப்பக்கம் சந்திரன் ,பெருமாள் மேற்கு நோக்கி உள்ளனர். உடன் அருகே பைரவர் தெற்கு நோக்கி உள்ளார்.ஐயனை காணும் முன் உள் பிரகாரத்தை வலம் வர சப்த மாதர்கள் வடக்கு நோக்கி உள்ளனர். சைவ குரவர் நால்வர்.
உதித முனிவர் வழிபட்ட சிவலிங்கமும் , தென்-மேற்கு,வடமேற்கு,வடகிழக்கு மூலையில் சிவலிங்கமும் உள்ளது. மேற்கில் ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி உள்ளார், உடன் அருகே லட்சுமி கிழக்கு நோக்கி உள்ளார்.
ஐயன் சுயம்பு மற்றும் மணலால் ஆனவர் என்பதால் மஞ்சள் காப்புடன் இருந்தார். ஐயன் கருவறை ஒட்டி சேஷ்ட்ட கணபதி, தக்ஷிண மூர்த்தி தலை சாய்ந்து விசேஷ வடிவில் உள்ளார். விஷ்ணு , பிரம்மா,விஷ்ணு துர்கை உள்ளனர்.
கோவிலின் வாயிலின் வலப்பக்கம் சுப்ரமணியர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளார்.
திருவாலங்காடு ரயில் நிலைத்திலிருந்து சுமார் 10km தென் மேற்கே அமைந்துள்ளது.
வழி:
திருச்சிற்றம்பலம்