Sunday, 18 January 2015

திரு(வட)முல்லைவாயில்

திரு(வட)முல்லைவாயில்
சிவமயம்
பெயர்: திருமுல்லைவாயில் மாசிலாமணியீசுவரர் திருக்கோயில்
மூலவர்: மாசிலாமணியீசுவரர்
தாயார்: கொடியிடைநாயகி
தல விருட்சம்:முல்லை
தீர்த்தம்: கல்யாண தீர்த்தம்

வரலாறு :
தொண்டை நாட்டுக்கு வடதிசையில்  எருக்கந்தூண்களும், வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள்  கொடுங்கோலாட்சி செய்து வந்தனர்.

(இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள் பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும்).

இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட  தொண்டைமான் படையுடன் கிளம்பி முல்லைக் கொடிகள் நிறைந்த  அழகிய திருமுல்லைவாயிலுக்கு வந்து வாணன் ,ஓணன் இருவரையும் ஒடுக்கி மக்களை  மகிழ்சியாக வாழவைக்க எண்ணி தன் படையுடன் வந்தான்.

திருமுல்லைவாயில் வந்தபோது மாலை நேரமாகிவிட்டதால், இரவு அங்கு தங்க வேண்டியதாயிற்று.இரவு உணவுக்குப் பின் தொண்டைமான் உறங்கச் சென்றான். நேரம் நடுநிசி நெருங்குவதாக இருந்தது. எங்கும் அமைதி நிலவியது. அந்த வேளையில் நெடுந்தொலைவில் வடகிழக்குத் திசையிலிருந்து ஒரு மணி ஓசை கேட்டது.அது தொலைவிலுள்ள சிவன் கோயிலின் அர்த்தசாம பூஜையின் மணி ஓசையாக இருக்கலாம் என்று அரசன் எண்ணினான்.

வாணன்.  தொண்டைமான் படையுடன் வந்திருக்கிறான் என்னும் செய்தியைத் தெரிந்துகொண்ட குறும்பர்கள், படையைத் திரட்டிக்கொண்டு போர் செய்யலாயினர். பைரவனின் உதவியால் பெற்ற பூதத்தின் துணைகொண்டு போர் செய்யலாயினர் தொண்டைமான் படைகள் பின்வாங்கின.

அதோடு, இனிமேல் போர் செய்ய இயலாது என்னும் நிலையும் வந்தது. ஓணன்,காந்தன் மூவரின் எதிர்த்தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்று மனம் வெதும்பித் திரும்பும்போது  பாசறைக்குத் திரும்பும் வழியில் அரசன் அமர்ந்திருந்த யானையின் கால்களை 
முல்லைக் கொடிகள் சுற்றிக்கொண்டன. யானை மேலே நடக்க முடியாமல் திகைத்து நின்றது.

தொண்டைமான் யானையின் மேலிருந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த தன்னுடைய வாளால்  வெட்டினான்.
அரசன் வெட்டிய இடத்திலிருந்து குருதி கொப்பளித்து பீறிட்டு  வர கண்ட மன்னன் பதறிப்போய் முல்லைக் கொடிகளை நீக்கியதும் அங்கே ஒரு சிவலிங்கம் வாளால் வெட்டுப்பட்டு குருதி வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு வருந்தி, தன் தவறினால்தானே சிவபெருமானுக்கு இக்கதி நேர்ந்தது என்றெண்ணி தன் தலையையே கொய்ய வாளை உயர்த்தினான்.

அப்போது ஈசனார் தோன்றி அவனைக் காத்து  தான் வெட்டுப்பட்டாலும் ( குற்றமற்ற )  மாசில்லா மணியாக விளங்குவேன் எனக் கூறி அருள் புரிந்தார். நந்தி பெருமானையும் அரசனுக்குத் துணையாக  அனுப்பி பகைவர்களை வெல்லப் பணித்தார்.

நந்தி பகவானின் துணையோடு குறும்பர்களின் கோட்டையைத் தகர்த்து வெற்றிவாகை சூடிய தொண்டைமான் அங்கிருந்த இரண்டு வெள்ளெருக்கன் தூண்களை கொணர்ந்து மாசில்லாமணீஸ்வரருக்கு  கருவறை கட்டி  வெளியே அந்த இரு வெள்ளெருக்கன் தூண்களை கருவறையின் இருபக்கமும் இருக்குமாறு நிறுத்தி அமைத்து இந்த ஆலயத்தையும்  அமைத்தான்.

அவ்வளவு பெரிய வெள்ளெருக்கன் தூண்களை வேறெங்குமே காண முடியாது என்பதும் இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்று.
இந்தத் தூண்களை இன்றளவும் மாசில்லாமணீஸ்வரர் கருவறையின் வாயிலில் காணலாம்..

வெட்டுப்பட்ட காரணத்தால் இறைவன் திருமேனி வருடம் முழுவதும் சந்தனக் காப்பினால் மூடப்பட்டிருக்கும்.
இந்த சந்தனக் காப்பு வருடத்துக்கு ஒரு முறை சித்திரை மாதம் சதய நக்ஷத்திரம் கூடிய சுப வேளையில்  களையப்பட்டு மீண்டும் புதியதாக சந்தனக் காப்பு பூசப்படும் .

ஆகவே அன்று ஒரு நாள் மட்டும் சந்தனக் காப்புக்கு முன்னால் இறைவன் திருமேனியை முழுவதுமாக பக்தர்கள் காணமுடியும்.

இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் நந்தி தேவர் இறைவனுடைய  ஆணையை ஏற்று தொண்டைமான் மன்னனுக்கு துணையாகச்  சென்று போரிட்டு வெற்றி கொணர்ந்ததால் இறைவனுக்கு முன்னால் துவஜஸ்தம்பத்தின் பின்னால்  எதிரிகளை அழித்து வெற்றி கொணரத் தயாராக கிழக்கு முகமாகத் திரும்பி  இருப்பார்.

அவர் பக்கத்திலேயே முல்லைக் கொடி வைத்து பூஜிக்கப்படுகிறது.
இறைவனும் இறைவி கொடியிடை நாயகியும்,
நந்தி பகவானும் மூவருமே கிழக்கு நோக்கி இருப்பது
இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு அம்சம்.

தொண்டைமான் மன்னனுக்கு இறைவன் அவசரக் கோலமாகக் காட்சி அளித்ததால் மாசில்லாமணீஸ்வரரும்  கொடியிடை நாயகியும் இடம் மாறி கிழக்கு முகமாகவே காட்சி அளிக்கிறார்கள்.

இவ்வாலயத்தில் சூரியன், பைரவர், நக்ஷத்திரங்கள், வீரபத்திரர், நவக்ரகங்கள் அனைவரும்   தம்வினை நீங்க இத்தலத்துப் பெருமானை வழிபட்ட காரணத்தால் இறைவனிடம் ஐக்கியமானவர்கள் என்றே
கருதப்படுவதால் ஶ்ரீ பைரவர், சூரியன், நக்ஷத்திரங்கள்,நவக்ரகங்கள், வீரபத்திரர்  இவர்களுக்கு தனி வழிபாடு கிடையாது .

இத்திருக்கோயிலில் பரமூர்த்தியைக் குறைவின்றி அருளும் பொருட்டு இறைவன் பாம்பை அணியாகக் கொண்டு வீற்றிருக்கின்றார். இன்றும்  இலிங்கத்தின்மேல் நாகாபரணத்தைக் காணலாம்.

கொடியிடை நாயகிக்கு தனி சன்னிதியும் இறைவன் மாசில்லாமணீஸ்வரருக்கு  தனி சன்னிதியும் அமைந்திருக்கிறது.
மாசில்லாமணீஸ்வரருக்கு  அபிஷேகம் இல்லாத காரணத்தால்  தனியாக ஒரு ரச லிங்கம் அமைத்திருப்பது இத்திருத்தலத்தின் விசேஷமாகும். 


கோவில் அமைப்பு:

தெற்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது.

கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி சன்னதி.
அவருக்குப் பின்னால் மதில்மீது தல வரலாற்றுச் சிற்பம் - யானை மீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம் - தன் கழுத்தை அரிவது - காட்சி தருவது ஆகியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால்
முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.
அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது.

சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட,  மண்டபம் தூங்கானை அமைப்புடையது.

ஆலய தீர்த்தமான கல்யாண தீர்த்தம் கோவிலுக்கு வெளியே தெற்கு கோபுரத்திறகு வலதுபுறம் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான லிங்கம்.
சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது.ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான்.வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.

தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது.இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நாலவர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.


சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான்,
நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி ,பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன.

பக்கத்தில் பிற்காலப் பிரதிஷ்டையான ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது.

பிரதான கருவறையின் வடக்குப் பக்கம் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு தனி சன்னிதி இருக்கிறது.

பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார்.
இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது.



சூரியன்-  துயர் நீங்கி விமோசனம் பெற்ற திருத்தலம் (தனி சன்னதி மேற்கு நோக்கி)

குசலவர் – பிரும்மஹத்தி தோஷம் நீங்க வரம் பெற்ற தலம்  ( குசலபுரீஸ்வரர் மேற்கு நோக்கி தனி சன்னதி )

சோழபுரீஸ்வரர் (கிழக்கு நோக்கி தனி சன்னதி)
திரு(வட)முல்லைவாயில் (பண் - தக்கேசி)

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்களென் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்து
மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றா யென்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழமன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் மரசே
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளல்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

சந்தன வேருங் காரகிற் குறடுந்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையால் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் தன்னையாட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.


விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவலா ரூரன்
உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையு மின்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே. 


அமைவிடம்:

அண்ணனூர் ரயில் நிலைத்திலிருந்து அல்லது திருமுல்லைவாயில் ரயில் நிலைத்திலிருந்து சுமார் 3 KM வடக்கே அமைந்துள்ளது.
வழி:


பயண அனுபவம்:
ஒவ்வொரு சனி கிழமையும் சிவாலயம் நடைபாதயாக செல்வது எனது வழக்கம் , 17-01-2015 சனி கிழமை திருமுல்லைவாயில் காணலாம் என முடிவு செய்திருந்தேன்.


திருவாரூரில் பிறக்க, திருவண்ணாமலையை நினைக்க,தில்லையை தரிசிக்க,  காசியில் இறக்க முக்தி கிட்டும் 
திருமுல்லைவாயிலை கேள்விப்பட்டாலே முக்தி கிடைக்கும் என்பது பெரும் சிறப்பு.

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment