Sunday, 25 January 2015

திருமயிலை (கபாலீச்சரம்)

திருமயிலை
சிவமயம்
பெயர்: திருமயிலை
மூலவர்:கபாலீசுவரர்
தாயார்:கற்பகவல்லியம்மை
தல விருட்சம்:புன்னை
தீர்த்தம்: கபாலீ(மணிகர்ணிக) தீர்த்தம்

வரலாறு :

இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

சம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் வரலாறு.

இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய பல்லவர் காலத்தில் சைவசமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான சம்பந்த நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.(மூலம் விக்கி)
கோவில் அமைப்பு:

கிழக்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். மேற்கில் திசையில் ஒரு நுழைவாயில் உள்ளது.
கிழக்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது.

நுழைவாயில் நேரே நர்த்தன கணபதி கிழக்கு நோக்கி தனி சன்னதி.
வல பக்கம் அண்ணாமலையார் கிழக்கு நோக்கி தனி சன்னதி உடன்
உண்ணா முலையம்மை  தெற்கு நோக்கி உள்ளது.

தொடர்ந்து வலம்வர கல்யாண மண்டபம் ,
இட பக்கம் அருகே பழனி ஆண்டவர்  தனி சன்னதி வடக்கு நோக்கி உள்ளர்.வல பக்கம் வள்ளிதெய்வானையுடன் சிங்கார வேலர்  மேற்கு நோக்கி தனி சன்னதி துவஸ்தம்பதுடன்.

தொடர்ந்து வலம்வர தாயார் கற்பகாம்பாள் தெற்கு நோக்கி தனி சன்னதி.

பிறகு கபாலீசுவரர் மேற்கு நோக்கி தனி சன்னதி ,சன்னதியின் உள் 63 உர்சவார் சிலை,துர்கை,லக்ஷ்மி,சரவஸ்தி மூவரும் கிழக்கு நோக்கி, வடகிழக்கு மூலையில் பைரவர்  தெற்கு நோக்கி உள்ளர்.
63 சிலை வடிவமாய் ,மூலவர் பின்புறதில் விஷ்ணுவிர்க்கு பதிலாக லிகோத்பவார் உள்ளர்.தென்கிழக்கு மூலையில் சூரியன் மேற்கு நோக்கி உள்ளர்.

கபாலீசுவரர் சன்னதி எதிரே இட பக்கம் அருணகிரியார் தனி சன்னதி.
வல பக்கம் அங்கம்பூம்பாவை உடன் திருஞானசம்பந்தர் தனி சன்னதி.

தொடர்ந்து வலம்வர தல விருட்சம் புன்னை மரமும் உடன் புன்னை வனநாதர் தனி சன்னதி மேற்கு நோக்கி உள்ளர்.

கோவிலின் வடகிழக்கு மூலையில் சனீஸ்வரர்  தனி சன்னதி மேற்கு நோக்கி உள்ளர்

இட பக்கம் சுந்தரேஸ்வர் கிழக்கு நோக்கி தனி சன்னதி,நவகிரக  சன்னதி மற்றும் ஜகதீஸ்வரார் கிழக்கு நோக்கி தனி சன்னதி.

திருமயிலை (பண் - சீகாமரம்)

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
அடலானே றூரும் அடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.



அமைவிடம்:

திருமயிலை ரயில் நிலைத்திலிருந்து சுமார் 350M தென் கிழக்கே அமைந்துள்ளது.
வழி:



திருச்சிற்றம்பலம்

Sunday, 18 January 2015

திரு(வட)முல்லைவாயில்

திரு(வட)முல்லைவாயில்
சிவமயம்
பெயர்: திருமுல்லைவாயில் மாசிலாமணியீசுவரர் திருக்கோயில்
மூலவர்: மாசிலாமணியீசுவரர்
தாயார்: கொடியிடைநாயகி
தல விருட்சம்:முல்லை
தீர்த்தம்: கல்யாண தீர்த்தம்

வரலாறு :
தொண்டை நாட்டுக்கு வடதிசையில்  எருக்கந்தூண்களும், வெங்கலக்கதவும் பவழத் தூண்களும் கொண்ட புழல்கோட்டையிலிருந்து பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்த ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள்  கொடுங்கோலாட்சி செய்து வந்தனர்.

(இந்த ஓணன், காந்தன் ஆகிய இவர்களே காஞ்சியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றவர்கள். அவர்கள் பூஜித்த திருக்கோவிலே திருஓணகாந்தன்தளி ஆகும்).

இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட  தொண்டைமான் படையுடன் கிளம்பி முல்லைக் கொடிகள் நிறைந்த  அழகிய திருமுல்லைவாயிலுக்கு வந்து வாணன் ,ஓணன் இருவரையும் ஒடுக்கி மக்களை  மகிழ்சியாக வாழவைக்க எண்ணி தன் படையுடன் வந்தான்.

திருமுல்லைவாயில் வந்தபோது மாலை நேரமாகிவிட்டதால், இரவு அங்கு தங்க வேண்டியதாயிற்று.இரவு உணவுக்குப் பின் தொண்டைமான் உறங்கச் சென்றான். நேரம் நடுநிசி நெருங்குவதாக இருந்தது. எங்கும் அமைதி நிலவியது. அந்த வேளையில் நெடுந்தொலைவில் வடகிழக்குத் திசையிலிருந்து ஒரு மணி ஓசை கேட்டது.அது தொலைவிலுள்ள சிவன் கோயிலின் அர்த்தசாம பூஜையின் மணி ஓசையாக இருக்கலாம் என்று அரசன் எண்ணினான்.

வாணன்.  தொண்டைமான் படையுடன் வந்திருக்கிறான் என்னும் செய்தியைத் தெரிந்துகொண்ட குறும்பர்கள், படையைத் திரட்டிக்கொண்டு போர் செய்யலாயினர். பைரவனின் உதவியால் பெற்ற பூதத்தின் துணைகொண்டு போர் செய்யலாயினர் தொண்டைமான் படைகள் பின்வாங்கின.

அதோடு, இனிமேல் போர் செய்ய இயலாது என்னும் நிலையும் வந்தது. ஓணன்,காந்தன் மூவரின் எதிர்த்தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்று மனம் வெதும்பித் திரும்பும்போது  பாசறைக்குத் திரும்பும் வழியில் அரசன் அமர்ந்திருந்த யானையின் கால்களை 
முல்லைக் கொடிகள் சுற்றிக்கொண்டன. யானை மேலே நடக்க முடியாமல் திகைத்து நின்றது.

தொண்டைமான் யானையின் மேலிருந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த தன்னுடைய வாளால்  வெட்டினான்.
அரசன் வெட்டிய இடத்திலிருந்து குருதி கொப்பளித்து பீறிட்டு  வர கண்ட மன்னன் பதறிப்போய் முல்லைக் கொடிகளை நீக்கியதும் அங்கே ஒரு சிவலிங்கம் வாளால் வெட்டுப்பட்டு குருதி வழிந்து கொண்டிருப்பதைக் கண்டு வருந்தி, தன் தவறினால்தானே சிவபெருமானுக்கு இக்கதி நேர்ந்தது என்றெண்ணி தன் தலையையே கொய்ய வாளை உயர்த்தினான்.

அப்போது ஈசனார் தோன்றி அவனைக் காத்து  தான் வெட்டுப்பட்டாலும் ( குற்றமற்ற )  மாசில்லா மணியாக விளங்குவேன் எனக் கூறி அருள் புரிந்தார். நந்தி பெருமானையும் அரசனுக்குத் துணையாக  அனுப்பி பகைவர்களை வெல்லப் பணித்தார்.

நந்தி பகவானின் துணையோடு குறும்பர்களின் கோட்டையைத் தகர்த்து வெற்றிவாகை சூடிய தொண்டைமான் அங்கிருந்த இரண்டு வெள்ளெருக்கன் தூண்களை கொணர்ந்து மாசில்லாமணீஸ்வரருக்கு  கருவறை கட்டி  வெளியே அந்த இரு வெள்ளெருக்கன் தூண்களை கருவறையின் இருபக்கமும் இருக்குமாறு நிறுத்தி அமைத்து இந்த ஆலயத்தையும்  அமைத்தான்.

அவ்வளவு பெரிய வெள்ளெருக்கன் தூண்களை வேறெங்குமே காண முடியாது என்பதும் இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்று.
இந்தத் தூண்களை இன்றளவும் மாசில்லாமணீஸ்வரர் கருவறையின் வாயிலில் காணலாம்..

வெட்டுப்பட்ட காரணத்தால் இறைவன் திருமேனி வருடம் முழுவதும் சந்தனக் காப்பினால் மூடப்பட்டிருக்கும்.
இந்த சந்தனக் காப்பு வருடத்துக்கு ஒரு முறை சித்திரை மாதம் சதய நக்ஷத்திரம் கூடிய சுப வேளையில்  களையப்பட்டு மீண்டும் புதியதாக சந்தனக் காப்பு பூசப்படும் .

ஆகவே அன்று ஒரு நாள் மட்டும் சந்தனக் காப்புக்கு முன்னால் இறைவன் திருமேனியை முழுவதுமாக பக்தர்கள் காணமுடியும்.

இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் நந்தி தேவர் இறைவனுடைய  ஆணையை ஏற்று தொண்டைமான் மன்னனுக்கு துணையாகச்  சென்று போரிட்டு வெற்றி கொணர்ந்ததால் இறைவனுக்கு முன்னால் துவஜஸ்தம்பத்தின் பின்னால்  எதிரிகளை அழித்து வெற்றி கொணரத் தயாராக கிழக்கு முகமாகத் திரும்பி  இருப்பார்.

அவர் பக்கத்திலேயே முல்லைக் கொடி வைத்து பூஜிக்கப்படுகிறது.
இறைவனும் இறைவி கொடியிடை நாயகியும்,
நந்தி பகவானும் மூவருமே கிழக்கு நோக்கி இருப்பது
இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு அம்சம்.

தொண்டைமான் மன்னனுக்கு இறைவன் அவசரக் கோலமாகக் காட்சி அளித்ததால் மாசில்லாமணீஸ்வரரும்  கொடியிடை நாயகியும் இடம் மாறி கிழக்கு முகமாகவே காட்சி அளிக்கிறார்கள்.

இவ்வாலயத்தில் சூரியன், பைரவர், நக்ஷத்திரங்கள், வீரபத்திரர், நவக்ரகங்கள் அனைவரும்   தம்வினை நீங்க இத்தலத்துப் பெருமானை வழிபட்ட காரணத்தால் இறைவனிடம் ஐக்கியமானவர்கள் என்றே
கருதப்படுவதால் ஶ்ரீ பைரவர், சூரியன், நக்ஷத்திரங்கள்,நவக்ரகங்கள், வீரபத்திரர்  இவர்களுக்கு தனி வழிபாடு கிடையாது .

இத்திருக்கோயிலில் பரமூர்த்தியைக் குறைவின்றி அருளும் பொருட்டு இறைவன் பாம்பை அணியாகக் கொண்டு வீற்றிருக்கின்றார். இன்றும்  இலிங்கத்தின்மேல் நாகாபரணத்தைக் காணலாம்.

கொடியிடை நாயகிக்கு தனி சன்னிதியும் இறைவன் மாசில்லாமணீஸ்வரருக்கு  தனி சன்னிதியும் அமைந்திருக்கிறது.
மாசில்லாமணீஸ்வரருக்கு  அபிஷேகம் இல்லாத காரணத்தால்  தனியாக ஒரு ரச லிங்கம் அமைத்திருப்பது இத்திருத்தலத்தின் விசேஷமாகும். 


கோவில் அமைப்பு:

தெற்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் பிரதான நுழைவு வாயிலாகும். கிழக்கு திசையில் ஒரு நுழைவாயில் இருந்தும் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது.

கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி சன்னதி.
அவருக்குப் பின்னால் மதில்மீது தல வரலாற்றுச் சிற்பம் - யானை மீதிருந்து மன்னன் முல்லைக்கொடியை வெட்டுவது சிவலிங்கம் - தன் கழுத்தை அரிவது - காட்சி தருவது ஆகியவை சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால்
முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது.
அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது.

சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட,  மண்டபம் தூங்கானை அமைப்புடையது.

ஆலய தீர்த்தமான கல்யாண தீர்த்தம் கோவிலுக்கு வெளியே தெற்கு கோபுரத்திறகு வலதுபுறம் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயரமான லிங்கம்.
சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேற்புறம் வெட்டுப்பட்டுள்ளது.ஆதலால் அபிஷேகங்கள் சிரசில் கிடையாது. ஆவுடையாருக்குத் தான்.வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.

தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது.இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நாலவர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.


சுவாமிக்கு முன்பு வெளியில் துவாரபாலகர்கள், தொண்டைமான்,
நீலகண்ட சிவாசாரியார், மகாவிஷ்ணு ஸ்ரீதேவி ,பூதேவி ஆகிய திருவுருவங்கள் உள்ளன.

பக்கத்தில் பிற்காலப் பிரதிஷ்டையான ரச லிங்கம் (பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது.

பிரதான கருவறையின் வடக்குப் பக்கம் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு தனி சன்னிதி இருக்கிறது.

பைரவர் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி காணப்படுகிறார்.
இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது.



சூரியன்-  துயர் நீங்கி விமோசனம் பெற்ற திருத்தலம் (தனி சன்னதி மேற்கு நோக்கி)

குசலவர் – பிரும்மஹத்தி தோஷம் நீங்க வரம் பெற்ற தலம்  ( குசலபுரீஸ்வரர் மேற்கு நோக்கி தனி சன்னதி )

சோழபுரீஸ்வரர் (கிழக்கு நோக்கி தனி சன்னதி)
திரு(வட)முல்லைவாயில் (பண் - தக்கேசி)

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன்
சீருடைக் கழல்களென் றெண்ணி
ஒருவரை மதியா துறாமைகள் செய்து
மூடியும் உறைப்பனாய்த் திரிவேன்
முருகமர் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றா யென்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர்
வெருவிட வேழமன் றுரித்தாய்
செண்பகச் சோலை சூழ்திரு முல்லை
வாயிலாய் தேவர்தம் மரசே
தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய்
சங்கிலிக் காஎன்கண் கொண்ட
பண்பநின் னடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டிசை பாட
அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன்வந் துலவிட அள்ளல்
செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

சந்தன வேருங் காரகிற் குறடுந்
தண்மயிற் பீலியுங் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்
கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி
வந்திழி பாலி வடகரை முல்லை
வயிலாய் மாசிலா மணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையால் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய
வார்குழல் மாமயிற் சாயல்
அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார்
அருநடம் ஆடல றாத
திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற்
செல்வனே எல்லியும் பகலும்
பணியது செய்வேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில்
நாயினேன் தன்னையாட் கொண்ட
சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந்
தடங்கடல் நஞ்சுண்ட கண்டா
செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில்
தேடியான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.

மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.    

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையாற் கட்டிட்
டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்
டருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில்
நாதனே நரைவிடை ஏறீ
பல்கலைப் பொருளே படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.


விரைதரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்டஎம் மானைத்
திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவலா ரூரன்
உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும்
உள்குளிர்ந் தேத்தவல் லார்கள்
நரைதிரை மூப்பும் நடலையு மின்றி
நண்ணுவர் விண்ணவர்க் கரசே. 


அமைவிடம்:

அண்ணனூர் ரயில் நிலைத்திலிருந்து அல்லது திருமுல்லைவாயில் ரயில் நிலைத்திலிருந்து சுமார் 3 KM வடக்கே அமைந்துள்ளது.
வழி:


பயண அனுபவம்:
ஒவ்வொரு சனி கிழமையும் சிவாலயம் நடைபாதயாக செல்வது எனது வழக்கம் , 17-01-2015 சனி கிழமை திருமுல்லைவாயில் காணலாம் என முடிவு செய்திருந்தேன்.


திருவாரூரில் பிறக்க, திருவண்ணாமலையை நினைக்க,தில்லையை தரிசிக்க,  காசியில் இறக்க முக்தி கிட்டும் 
திருமுல்லைவாயிலை கேள்விப்பட்டாலே முக்தி கிடைக்கும் என்பது பெரும் சிறப்பு.

திருச்சிற்றம்பலம்

Sunday, 11 January 2015

திருக்கச்சூர்- II

திருக்கச்சூர்

சிவமயம்

பெயர்: திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்: மருந்தீஸ்வரர்
தாயார்: இருள் நிக்கி அம்பாள்


தல விருட்சம்: பால மரம்
தீர்த்தம்:  ஔஷத தீர்த்தம்






வரலாறு:



ஒருசமயம் இந்திரன், தான் பெற்ற சாபத்தின் பலனால் நோய் உண்டாகி அவதிப்பட்டான். தேவலோக மருத்துவர்களான அசுவினி தேவர்கள் அவனுக்கு எவ்வளவோ மருத்துவம் செய்தும் நோயை குணப்படுத்த முடியவில்லை. எனவே நோயை குணப்படுத்தும் மூலிகையைத்தேடி தேவர்கள் பூலோகம் வந்தனர். பல இடங்களில் தேடியும் மருந்து கிடைக்கவில்லை. அவர்கள் நாரதரிடம் ஆலோசனை கேட்க, அவர் மருந்துமலை எனும் இம்மலையில் குடி கொண்டிருக்கும் சிவனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால் அவர்கள் அருளால் மருந்து கிடைக்கும் என்று கூறினார். அதன்படி இங்கு வந்த அசுவினி தேவர்கள் சுவாமியை வழிபட்டனர். அவர்களுக்கு இரங்கிய சிவன் மருந்து இருக்கும் இடத்தை காட்டி அருள்புரிந்தார். தேவர்கள் பலா, அதிபலா எனும் இரண்டு மூலிகைகளை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்று இந்திரனின் நோயை குணப்படுத்தினர். இந்திரனுக்கு மருந்து கொடுத்தவர் என்பதால் சிவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

சிவன், அசுவினி தேவர்களிடம் மருந்து இருந்த இடத்தை காட்டிய போதிலும், அவர்களால் எது சரியான மருந்து என கண்டுபிடிக்க முடியவில்லை. குழப்பத்தில் தவித்த அவர்களின் மனநிலையை கண்டு இரக்கம் கொண்ட அம்பாள், மூலிகையின் மீது ஒளியை பரப்பி அதனை சூழ்ந்திருந்த இருளை அகற்றி அருள்புரிந்தாள். இதனால் அம்பாளை இருள்நீக்கியம்பாள் என்றழைக்கின்றனர்.

பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் அடுத்தடுத்து இருக்கிறது. சண்டிகேஸ்வரர், பிரம்ம சண்டிகேஸ்வரராக நான்கு முகங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு திங்கட்கிழமைகளில் தேன் அபிஷேகங்கள் செய்து வழிபடுவது சிறப்பு சிறிய மலையின் மீது அமையப்பெற்ற கோயில் இது.

சுந்தரர் இத்தலத்து சிவனை, மாலை மதியே! மலைமேல் மருந்தே!' என பாடியுள்ளார். கோயில் கொடிமரத்தின் அருகில் சிறிய மண் குழி ஒன்று உள்ளது. இம்மண்ணை மருந்து என்கிறார்கள். இதனை உட்கொள்ள நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் உள்ள மருந்துதீர்த்தக் கிணறு சற்று தூரம் நடந்து சென்று தீர்த்தம் எடுக்கும்படி கரையுடன் இருக்கிறது. மலை அடிவாரத்தில் தாலமூல விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார்.

கோவில் அமைப்பு:









பாடல் வகை:
தேவாரம் (7.41 திருக்கச்சூர்) (சுந்தரர்)

திருக்கச்சூர் ஆலக்கோயில் (பண் - கொல்லிக்கௌவாணம்)

முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.


சாலக் கோயில் உளநின் கோயில்
அவையென் றலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்கட் டுரைத்த அம்மானே.

விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

மேலை விதியே வினையின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.


பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

ஊனைப் பெருக்கி உன்னை நினையா
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் னோக்கி
மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்வ தழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
அவரெந் தலைமேற் பயில்வாரே.


அமைவிடம்:

சிங்க பெருமாள் கோவில் ரயில் நிலைத்திலிருந்து சுமார் 3 KM வடமேற்கே அமைந்துள்ளது.
வழி:



பயண அனுபவம்: 

ஒவ்வொரு சனி கிழமையும் சிவாலயம் நடைபாதயாக செல்வது எனது வழக்கம் , 10-01-2015 சனி கிழமை திருகச்சூர் கச்சபேஸ்வரர் காணலாம் என முடிவு செய்திருந்தேன்.விக்கி மற்றும் கூகிள் உதவியால் செல்லும் வழி தல வரலாறு முதலியவை திராட்டி நினைவில் வைத்து இருந்தேன்.காலை 4.00 மணியளவில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு மார்க்கமாக சிங்க பெருமாள் கோயில் ரயில் நிலையத்தை காலை 6.10 க்கு சென்றடைந்தேன்.

அங்கிருந்து நடைபாதயாக சென்று கோயிலை அடைந்தேன். கோயில் பூட்ட பட்டிருந்தது உடனருக்கே விசாரித்து கோயில் 8 மணி அளவிலே திறக்கபடும் என அறிந்து,அருகில் உள்ள மலைக்கோயில் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று பின் கச்சபேஸ்வரர் தரிசனம் செய்து ,அருகில் உள்ள செட்டிபுண்ணியம் சென்று யோக ஹயக்ரீவர் தரிசனம் செய்து வீடு திரும்பினேன்.

திருச்சிற்றம்பலம்

திருக்கச்சூர்- I

திருக்கச்சூர்

சிவமயம்

பெயர்: திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் திருக்கோயில்

மூலவர்: கச்சபேஸ்வரர்
தாயார்: அஞ்சனாட்சி

பிற பெயர்கள்(மூலவர்):தினம்விருந்திட்டநாதர்,விருத்திட்ட ஈஸ்வரர்
பிற பெயர்கள்(தாயார்):கன்னியுமையம்மை,சுந்தர வள்ளி

புராண பெயர்கள்:

தல விருட்சம்: கல்லால மரம்.

தீர்த்தம்: கூர்ம (ஆமை) தீர்த்தம்


வரலாறு:

கச்சபேஸ்வரர் திருக்கோயில்: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட அவர் கச்சப (ஆமை) வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே இத்தலத்து சிவனுக்கு, கச்சபேஸ்வரர் என்ற பெயரும், தலத்திற்கு திருக்கச்சூர் என்ற பெயரும் ஏற்பட்டது.




விஷ்ணுவுக்கு அருள் செய்த சிவன் அவருக்காக இத்தலத்தில், தியாகராஜராக அஜபா நடனம் ஆடிக் காட்டியுள்ளார். எனவே, இத்தலம் உபயவிட தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உற்சவராக ஒரு சிறு தொட்டிக்குள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் தியாகராஜருக்கே திருவிழாக்கள் நடப்பதும், அவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுவதும் சிறப்பு. அருணகிரியார் தனது திருப்புகழில் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார். தலவிருட்சம் கல்லால மரம் என்பதால் இக்கோயிலுக்கு ஆலக்கோயில் என்றொரு பெயரும் உள்ளது.

கோவில் அமைப்பு:

கச்சபேஸ்வரர்  கிழக்கு நோக்கி தனி சன்னதி.
அஞ்சனாட்சி தெற்கு நோக்கியபடி தனிச்சன்னதியில் அருளுகிறாள்.
மகாகணபதி கிழக்கு நோக்கி தனி சன்னதி,
வள்ளி,தெய்வானை முருக பெருமானுடன் கிழக்கு நோக்கி தனி சன்னதி.
 
விருத்திட்ட ஈஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி.

உடன்  அருகே சுந்தர மூர்த்தி வடக்கு  நோக்கி தனி சன்னதி.



பைரவர்  தெற்கு நோக்கி வடகிழக்கில் தனி சன்னதி .

பாடல் வகை:
தேவாரம் (7.41 திருக்கச்சூர்) (சுந்தரர்)

திருக்கச்சூர் ஆலக்கோயில் (பண் - கொல்லிக்கௌவாணம்)

முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

சாலக் கோயில் உளநின் கோயில்
அவையென் றலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்
வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்
அறங்கட் டுரைத்த அம்மானே.

விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

மேலை விதியே வினையின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை யெழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

ஊனைப் பெருக்கி உன்னை நினையா
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென் னோக்கி
மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமா மலரிட் டுனையேத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயங் கொள்வ தழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனையாள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
அவரெந் தலைமேற் பயில்வாரே.


அமைவிடம்:

சிங்க பெருமாள் கோவில் ரயில் நிலைத்துலிருந்து சுமார் 2.5 KM வடமேற்கே அமைந்துள்ளது.
வழி:


பயண அனுபவம்: 

ஒவ்வொரு சனி கிழமையும் சிவாலயம் நடைபாதயாக செல்வது எனது வழக்கம் , 10-01-2015 சனி கிழமை திருகச்சூர் கச்சபேஸ்வரர் காணலாம் என முடிவு செய்திருந்தேன்.விக்கி மற்றும் கூகிள் உதவியால் செல்லும் வழி தல வரலாறு முதலியவை திராட்டி நினைவில் வைத்து இருந்தேன்.காலை 4.00 மணியளவில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு மார்க்கமாக சிங்க பெருமாள் கோயில் ரயில் நிலையத்தை காலை 6.10 க்கு சென்றடைந்தேன்.

அங்கிருந்து நடைபாதயாக சென்று கோயிலை அடைந்தேன். கோயில் பூட்ட பட்டிருந்தது உடனருக்கே விசாரித்து கோயில் 8 மணி அளவிலே திறக்கபடும் என அறிந்து,அருகில் உள்ள மலைக்கோயில் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று பின் கச்சபேஸ்வரர் தரிசனம் செய்து ,அருகில் உள்ள செட்டிபுண்ணியம் சென்று யோகஹயக்ரீவர் தரிசனம் செய்து வீடு திரும்பினேன்.












 திருச்சிற்றம்பலம்

Sunday, 4 January 2015

திருவான்மியூர்

திருவான்மியூர்

சிவமயம்

பெயர்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்: மருந்தீஸ்வரர் (சுயம்பு)
தாயார்: திரிபுர சுந்தரி அம்மன்

பிற பெயர்கள்(மூலவர்): பால்வண்ண நாதர்
பிற பெயர்கள்(தாயார்): சுந்தரமாது ,சொக்கநாயகியம்மை.
தல விருட்சம்: வன்னி மரம்


தீர்த்தம்:பஞ்ச தீர்த்தம்
வரலாறு :
வால்மீகி முனிவருக்கு ஈசன் காட்சி தந்த தலம் என்பதால் வான்மீகியூர் என்று வழங்கபெற்று  தற்போது திருவான்மியூர் என அழைக்க பெறுகிறது.






இத்தலத்து இறைவனின் பெயர்க்காரணங்கள்:

பாடல் வகை:
தேவாரம் (2.4 திருவான்மியூர்) (திருஞானசம்பந்தர் )

திருவான்மியூர் ( பண் - இந்தளம் )  

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.

சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்
சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.    

கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.    

மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்
துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.

மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.

போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந்
தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.

வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.

தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.

பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்
சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே.

மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.

மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே.



தேவாரம் (3.055 திருவான்மியூர்) (திருஞானசம்பந்தர் )
திருவான்மியூர் (பண் - கௌசிகம்)

விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய் உமைநங்கையோர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும்
அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே.

இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய்
கொடியார் மாமதியோ டரவம்மலர்க் கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ் திருவான்மி யூருறையும்
அடிகேள் உன்னையல்லால் அடையாதென தாதரவே.

கையார் வெண்மழுவா கனல்போல்திரு மேனியனே
மையார் ஒண்கண்நல்லாள் உமையாள்வளர் மார்பினனே
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூருறையும்
ஐயா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
தென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மி யூருறையும்
அண்ணா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

நீதீ நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்தலை யொன்றினையுஞ்
சேதீ சேதமில்லாத் திருவான்மி யூருறையும்
ஆதீ உன்னையல்லால் அடையாதென தாதரவே.

வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவருங்
கானார் ஆனையின்தோல் உரித்தாய்கறை மாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ் திருவான்மி யூருறையும்
ஆனா யுன்னையல்லால் அடையாதென தாதரவே.

பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்
நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மி யூருறையும்
அறிவே யுன்னையல்லால் அடையாதென தாதரவே.

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்
திண்டேர் வீதியதார் திருவான்மி யூருறையும்
அண்டா வுன்னையல்லால் அடையாதென தாதரவே.

கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்
நன்றா னபுகழான் மிகுஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி யூரதன்மேற்
குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே.

திருச்சிற்றம்பலம்



திருவான்மியூர் - திருக்குறுந்தொகை (அப்பர்)

விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே.
   
பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.

மந்த மாகிய சிந்தை மயக்கறுத்
தந்த மில்குணத் தானை யடைந்துநின்
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே.

உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற்
கள்ள முள்ள வழிக்கசி வானலன்
வெள்ள முமர வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே.

படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.    

நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக்
குணங்கள் தாம்பர விக்குறைந் துக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே.

ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுரு வாய பரமனென்
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர்
வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங்
காட்டில் வேவதன் முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில்
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே.

பார மாக மலையெடுத் தான்றனைச்
சீர மாகத் திருவிர லூன்றினான்
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
வார மாயினன் வான்மியூ ரீசனே.





திருவான்மியூர் ரயில் நிலைத்துலிருந்து சுமார் 1.5 KM கிழக்கே அமைந்துள்ளது.

திருவான்மியூர்  பேருந்து நிலையம் அருகில்.

வழி:


கோவில் அமைப்பு:

மூலவர் சன்னதியில்:
மூலவர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்,
சூரியன்-இங்கு ஸ்ரீ சக சிவ சூரியன் என்று குறிப்பிடபடுகிறது
சைவ குரவர் நால்வர்.63 நாயன்மார்கள் உற்சவர் உடன் 108 சிவலிங்ககள்.
கேதரீஸ்வரர்,சுந்தரேஸ்வரர்,அருணாசலேஸ்வரர்.
பைரவர்
தாயார் தென் திசை நோக்கி காட்சி தருகிறார்.

விநாயகர்-விஜயகணபதி தனி சன்னதி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்
வள்ளி தெய்வானையுடன் முருக பெருமானுக்கு தனி சன்னதி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
3-கணபதி  தாயார் சன்னதி எதிரே.
கோயிலின் கிழக்கு கோபுர வாசல் முன்னே தெப்பகுளமும், உள்ளே ஒரு சிறிய தடாகமும், நந்தவனம் கோயிலுக்கு உள்ளேயேயும் அமைந்துள்ளது








வன்னி,தென்னை,அசோகா,தேக்கு,செம்பருத்தி,பவளமல்லி,
சீதா,மூங்கில்,மகிழ மரம் மற்றும் பல தாவர வகைகள் உள்ளன.

காலைச்சந்தி,உச்சி காலம்,சாயரட்சை,அர்த்த ஜாமம்,பள்ளியறை
என 5 வேலை பூஜை நடைபெறுகிறது.

பயண அனுபவம்: 

ஒவ்வொரு சனி கிழமையும் சிவாலயம் நடைபாதயாக செல்வது எனது வழக்கம் , 03-01-2015 சனி கிழமை,திருக்கச்சூர் செல்லாம் என முடிவு செய்திருந்தேன் ஆனால் பணியின் காரணமாய் அலுவலகம் அருகில் உள்ள திருவான்மியூர் சென்றேன்.,

அன்று இரவு அர்த்த ஜாம பூஜையில் கலந்துகொண்டேன்.
பூஜையின்போது குடியிருந்த பக்தர்கள்  சிவவாக்கியாரின் சிவவாக்கியம் சித்தர் பாடலை பாடினார்கள்.



சிவவாக்கியம் 

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.     3

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.     6

நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!     12

இடத்ததுன்கண் சந்திரன், வலத்ததுன்கண் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே?     53

உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும்அல்ல கந்தம்அல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும்ஆவி தானும்அல்ல
அரியதாக நின்றநேர்மை யாவர்காண வல்லரே.     187

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்தபோது வேணும்என்று பேணுவார்;
நம்கலம் கவிழ்ந்தபோது நாறும்என்று போடுவார்
எண்கலந்து நின்றமாயம் என்னமாயம் ஈசனே.     79

ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.     2

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.     7

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை?     26

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ?
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ?
செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே.     43

மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்;
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்;
தோன்றும்ஓர் எழுத்துளே சொல்லஎங்கும் இல்லையே!     99


நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே!
நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!     104

இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்,
இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ?
இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே.     116

காரகார காரகார காவல்ஊழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.     117

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற தெம்பிரான்
மண்ணிலாம் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்துவாழ்வ துண்மையே.     121

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்
உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்
மகாரமானது அம்பலம் வடிவானது அம்பலம்
சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.     406

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானேதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே.     486

ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!     109


இந்த பாடலின் பிரதியை எம்.எல்.விரா டிஜிட்டல் கிராபிக்ஸ் சென்னை -96 இலவசமாக பக்தர்களுக்கு வழங்கினார், அவர்களுக்கு எனது நன்றி.

பின் மருந்தீஸ்வரர் பால் அபிஷேகம் கண்டேன்.

பின் பக்தர்கள் மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் பாடலை பாடினார்கள்.

பள்ளியறை பூஜையுடன் கோவில்  மூடப்பட்டது.