Monday, 16 March 2015

திருக்கச்சிவேகம்பம்-காஞ்சிபுரம்-2

திருக்கச்சிவேகம்பம்
சிவமயம்
பெயர்: திருக்கச்சிவேகம்பம்
மூலவர்:ஏகாம்பரநாதர்
தாயார்:ஏலவார்குழலி
தல விருட்சம்: மாமரம்
தீர்த்தம்: சிவகங்கை தீர்த்தம்

வரலாறு :
இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்ய கம்பையாற்றின் கரையில் எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அப்பொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வர பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அப்பொழுது இறைவனது லிங்கத் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார்.

இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.

கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது.

பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்

இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத்,
திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்

கோவிலின் அமைப்பு:

தெற்கில் உள்ள ராஜகோபுரம் இக்கோவிலின் பிரதான நுழைவாயில் ஆகும். நுழைவாயில் உள் செல்ல  கிழக்கு நோக்கி உள்ள கொடி மரம் உடன் அருகே கச்சி மயானீஸ்வரர் மேற்கு நோக்கி  உள்ளார்.

கோவில் குளம் சிவகங்கை தீர்த்தம் வடமேற்கு மூளையில் உள்ளது.

கிழக்கில் உள்ள பிரகாரத்தை அடைய உள் பிரகரமாய் ஏகாம்பரநாதர் சன்னதி .சன்னதியின் உள் ஏகாம்பரநாதர் -ஏலவார்குழலி  கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தரிசித்து கோவிலை வலம் வர திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் மற்றும் சாக்கிய நாயனார்  மேற்கு நோக்கி உள்ளனர், பாலசந்திர கணபதி, படிக லிங்கம்,பிரளய லிங்கம்,சைவ குரவர் நால்வர்,அகதீஸ்வரர்,பொல்லா பிள்ளையார்,63-வர் அவர்தம் பெரிய புராண படலமும் பெயரும் காணபாடுகிறது. பிரகரதைத்யொட்டி பிரம்மா வழிபட்ட வெள்ளகம்பர் லிங்கம் உள்ளது.  காசி விஸ்வநாதர், சந்தான கணபதி,சௌபாக்கிய கணபதி,சக்தி கணபதி தொடர்ந்து 108 லிங்கம் உள்ளது ,வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக பெருமான், மார்க்கண்டேஸ்வரர்,
மத்தல மாதேஸ்வரர், விஷ்ணு வழிபட்ட கள்ள கம்பர்,ருத்ரர் வழிபட்ட நல்ல கம்பர்.

ஏகாம்பரநாதர் சன்னதியின் வெளி பிராகாரத்தை வலம் வர பிரளய காளியம்மன் சன்னதி கிழக்கு நோக்கி, தொடர்ந்து வலம் வர லிங்க வடிவங்கள் பிரகாரதின் வடக்கு,தெற்கு,மேற்கு புறமும் உள்ளது.

ஐந்து முக விநாயகர் சன்னதி மேற்கு நோக்கி உள்ளது. இராமர் வழிபட்ட 1008 லிங்க வடிவன சகஸ்கார லிங்கம் உள்ளது. வெளி பிரகாரதின் மத்தியில் ஏகாம்பரநாதர் சன்னதியிக்கு பின்புறம் 3500 ஆண்டு பழமை வாய்ந்தது என குறிப்பிடபட்ட தல விருட்சமான மாமரம் உள்ளது.
மாவடி கந்தர் ,ஏலவார்குழலி சன்னதி உடன் அருகே உள்ளது.

வடகிழக்கு  மூளையில்  தெற்கு நோக்கி பைரவர் சன்னதி, உடன் அருகே நடராஜர் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது எதிர் முனையில் கழற்சிங்க நாயனார் அமைக்க பெற்றுள்ளது.






பாடல் வகை:

தேவாரம் 1.133 திருவேகம்பம் (திருஞானசம்பந்தர்) (பண் - மேகராகக்குறிஞ்சி)


வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.

வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.

வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.

தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்
தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே.

குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.

ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை
காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.

திருச்சிற்றம்பலம்

தேவாரம் 4.44 திருவேகம்பம்-திருநேரிசை (திருநாவுகரசர்) (பண் - தக்கேசி)


நம்பனை நகர மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை யாற்றை அணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் திங்கட் செஞ்சடைக் கடவுள் தன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா எழுகின் றேனே.

ஒருமுழம் உள்ள குட்டம் ஒன்பது துளையு டைத்தாய்
அரைமுழம் அதன் அகலம் அதனில்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழும் மாடக் கச்சியே கம்ப னீரே.

மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றுந் தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குந் தலைவர் தாமே.

பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.

மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபாலம் ஏந்திக் கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே.

தருவினை மருவுங் கங்கை தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றுந்
திருவினைத் திருவே கம்பஞ் செப்பிட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்கே உள்ளத்தால் உகக்கின் றேனே.

கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகில் உலகெலாம் உய்ய உண்டான்
எண்டிசை யோரும் ஏத்த நின்றஏ கம்பன் றன்னைக்
கண்டுநான் அடிமை செய்வான் கருதியே திரிகின் றேனே.

படமுடை அரவி னோடு பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக் கண்டவர் அஞ்ச அம்ம
இடமுடைக் கச்சி தன்னுள் ஏகம்பம் மேவி னான்றன்
நடமுடை யாடல் காண ஞாலந்தான் உய்ந்த வாறே.

பொன்றிகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ளம் மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக் குவளையங் கண்டர் எம்மை
இன்றுயில் போது கண்டார் இனியர்ஏ கம்ப னாரே.

துருத்தியார் பழனத் துள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார் வல்வினை மாயு மன்றே.

திருச்சிற்றம்பலம்

தேவாரம் 4.100 திருவேகம்பம்-திருவிருத்தம் (திருநாவுகரசர்) (பண் - தக்கேசி)

ஓதுவித் தாய்முன் அறவுரை காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி வாய்கச்சி யேகம்பனே.

எத்தைக்கொண் டெத்தகை ஏழை அமணொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னைக் கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினிற் சோதியும் மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி யேகம்பனே.

மெய்யம்பு கோத்த விசயனோ டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய் தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி போற்றாக் கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில் சூழ்கச்சி யேகம்பனே.

குறிக்கொண் டிருந்துசெந் தாமரை ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் பிஞ்ஞகனே.

உரைக்குங் கழிந்திங் குணர்வரி யான்உள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண் வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க் கறியவொண் ணானெங்கள் ஏகம்பனே.

கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே.

அரிஅயன் இந்திரன் சந்திரா தித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே.

பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத் தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி யேகம்பனே.

ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு மானினி யல்லமென்னிற்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல் லாந்தனி யேனென்றென்னை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய சுடர்வண்ணனே.

உந்திநின் றாருன்றன் ஓலக்கச் சூளைகள் வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு மாலும் மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி எங்ஙன மோவந் திறைஞ்சுவதே.

திருச்சிற்றம்பலம்

தேவாரம் 5.47 திருவேகம்பம்-திருக்குறுந்தொகை (திருநாவுகரசர்)


பண்டு செய்த பழவினை யின்பயன்
கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே
வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன்
தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே.

நச்சி நாளும் நயந்தடி யார்தொழ
இச்சை யாலுமை நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழிற்
கச்சி யேகம்ப மேகை தொழுமினே.

ஊனி லாவி இயங்கி உலகெலாம்
தானு லாவிய தன்மைய ராகிலும்
வானு லாவிய பாணி பிறங்கவெங்
கானி லாடுவர் கச்சியே கம்பரே.

இமையா முக்கணர் என்னெஞ்சத் துள்ளவர்
தமையா ரும்மறி வொண்ணாத் தகைமையர்
இமையோ ரேத்த இருந்தவன் ஏகம்பன்
நமையா ளும்மவ னைத்தொழு மின்களே.

மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி ஏகம்பத் தெந்தையே.

பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க்
கருளும் நன்மைதந் தாய அரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம்
இருள்கெடச் சென்று கைதொழு தேத்துமே.

மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்
தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சி யேகம்பனே.

பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று பேசற் கரியவன்
வண்ண மில்லி வடிவுவே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சி யேகம்பனே.

திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன் கச்சி யேகம்பனே.

இடுகு நுண்ணிடை ஏந்திள மென்முலை
வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே.

இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக் கவ்விர லூன்றலுங்
கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே.

திருச்சிற்றம்பலம்

தேவாரம் 5.48 திருவேகம்பம்-திருக்குறுந்தொகை (திருநாவுகரசர்)


பூமே லானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவ ரெனாமை நடுக்குறத்
தீமே வும்முரு வாதிரு வேகம்பா
ஆமோ அல்லற் படவடி யோங்களே.

அருந்தி றல்அம ரர்அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோ
டிருந்த வன்னெழி லார்கச்சி யேகம்பம்
பொருந்தச் சென்று புடைபட் டெழுதுமே.

கறைகொள் கண்டத்தெண் டோ ளிறை முக்கணன்
மறைகொள் நாவினன் வானவர்க் காதியான்
உறையும் பூம்பொழில் சூழ்கச்சி யேகம்பம்
முறைமை யாற்சென்று முந்தித் தொழுதுமே.

பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.

சிந்தை யுட்சிவ மாய்நின்ற செம்மையோ
டந்தி யாய்அன லாய்ப்புனல் வானமாய்
புந்தி யாய்ப்புகுந் துள்ளம் நிறைந்தவெம்
எந்தை யேகம்பம் ஏத்தித் தொழுமினே.

சாக்கி யத்தொடு மற்றுஞ் சமண்படும்
பாக்கி யம்மிலார் பாடு செலாதுறப்
பூக்கொள் சேவடி யான்கச்சி யேகம்பம்
நாக்கொ டேத்தி நயந்து தொழுதுமே.

மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை
ஆர்ப்ப தன்முன் னணிஅம ரர்க்கிறை
காப்ப தாய கடிபொழில் ஏகம்பம்
சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே.

ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ்
சால நீயுறு மால்தவிர் நெஞ்சமே
நீல மாமிடற் றண்ணலே கம்பனார்
கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.

பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்
மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்திய
கைய னைக்கச்சி யேகம்பம் மேவிய
ஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே.

அரக்கன் றன்வலி உன்னிக் கயிலையை
நெருக்கிச் சென்றெடுத் தான்முடி தோள்நெரித்
திரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பந்
தருக்க தாகநாஞ் சார்ந்து தொழுதுமே.

திருச்சிற்றம்பலம்

தேவாரம் 6.64 திருவேகம்பம்-திருத்தாண்டகம் (திருநாவுகரசர்)

கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண்
குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்
காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண்
கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை
நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண்
நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல்
ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

பரந்தவன்காண் பல்லுயிர்க ளாகி யெங்கும்
பணிந்தெழுவார் பாவமும் வினையும் போகத்
துரந்தவன்காண் தூமலரங் கண்ணி யான்காண்
தோற்ற நிலையிறுதிப் பொருளாய் வந்த
மருந்தவன்காண் வையங்கள் பொறைதீர்ப் பான்காண்
மலர்தூவி நினைந்தெழுவா ருள்ளம் நீங்கா
திருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

நீற்றவன்காண் நீராகித் தீயா னான்காண்
நிறைமழுவுந் தமருகமும் எரியுங் கையில்
தோற்றவன்காண் தோற்றக்கே டில்லா தான்காண்
துணையிலிகாண் துணையென்று தொழுவா ருள்ளம்
போற்றவன்காண் புகழ்கள்தமைப் படைத்தான் றான்காண்
பொறியரவும் விரிசடைமேற் புனலுங் கங்கை
ஏற்றவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

தாயவன்காண் உலகிற்குத் தன்னொப் பில்லாத்
தத்துவன்காண் மலைமங்கை பங்கா வென்பார்
வாயவன்காண் வரும்பிறவி நோய்தீர்ப் பான்காண்
வானவர்க்குந் தானவர்க்கும் மண்ணு ளோர்க்குஞ்
சேயவன்காண் நினைவார்க்குச் சித்த மாரத்
திருவடியே உள்கிநினைந் தெழுவா ருள்ளம்
ஏயவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

அடுத்தானை யுரித்தான் காண்
இச்செய்யுளில் எஞ்சிய பாகம் சிதைந்து போயிற்று.

அழித்தவன்காண் எயில்மூன்றும் அயில்வா யம்பால்
ஐயாறும் இடைமருதும் ஆள்வான் றான்காண்
பழித்தவன்காண் அடையாரை அடைவார் தங்கள்
பற்றவன்காண் புற்றரவ நாணி னான்காண்
சுழித்தவன்காண் முடிக்கங்கை அடியே போற்றுந்
தூயமா முனிவர்க்காப் பார்மேல் நிற்க
இழித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்
பசைந்தவன்காண் பேய்க்கணங்கள் பரவி யேத்தும்
பான்மையன்காண் பரவிநினைந் தெழுவார் தம்பால்
கசிந்தவன்காண் கரியினுரி போர்த்தான் றான்காண்
கடலில்விட முண்டமரர்க் கமுத மீய
இசைந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

முடித்தவன்காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால்
வலியார்தம் புரமூன்றும் வேவச் சாபம்
பிடித்தவன்காண் பிஞ்ஞகனாம் வேடத் தான்காண்
பிணையல்வெறி கமழ்கொன்றை அரவு சென்னி
முடித்தவன்காண் மூவிலைநல் வேலி னான்காண்
முழங்கியுரு மெனத்தோன்று மழையாய் மின்னி
இடித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

வருந்தான்காண் மனமுருகி நினையா தார்க்கு
வஞ்சகன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமு மற்று மாகிப்
பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் றான்காண்
பங்கயத்தோன் றன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

வெம்மான உழுவையத ளுரிபோர்த் தான்காண்
வேதத்தின் பொருளான்காண் என்றி யம்பி
விம்மாநின் றழுவார்கட் களிப்பான் றான்காண்
விடையேறித் திரிவான்காண் நடஞ்செய் பூதத்
தம்மான்காண் அகலிடங்கள் தாங்கி னான்காண்
அற்புதன்காண் சொற்பதமுங் கடந்து நின்ற
எம்மான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

அறுத்தான்காண் அயன்சிரத்தை அமரர் வேண்ட
ஆழ்கடலின் நஞ்சுண்டங் கணிநீர்க் கங்கை
செறுத்தான்காண் தேவர்க்குந் தேவன் றான்காண்
திசையனைத்துந் தொழுதேத்தக் கலைமான் கையிற்
பொறுத்தான்காண் புகலிடத்தை நலிய வந்து
பொருகயிலை யெடுத்தவன்றன் முடிதோள் நாலஞ்
சிறுத்தான்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

திருச்சிற்றம்பலம்


தேவாரம் 6.65 திருவேகம்பம்-திருத்தாண்டகம் (திருநாவுகரசர்)


உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க
ஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்
வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

நேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால்
இல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்
கூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே
குடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை
வாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்
ஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

பொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும்
புண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின்
மறையவன்காண் மறையவனைப் பயந்தோன் றான்காண்
வார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்
பிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்
பேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்
இறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

பாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்
பனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்
செறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்
பேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும்
பெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த
ஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்
பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

ஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்
அணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை
காய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்
கனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர்
பயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்
ஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

உமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்
உகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்
இமய வடகயிலைச் செல்வன் றான்காண்
இல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்
சமயமவை ஆறினுக்குந் தலைவன் றான்காண்
தத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய
இமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்
தூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்
உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்
ஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண்
வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்
வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்
எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

முந்தைகாண் மூவரினு முதலா னான்காண்
மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்
தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்
தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்
சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்
சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்
எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்
பூதகண நாதன்காண் புலித்தோ லாடை
தன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்
சங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்
மின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை
எடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்
இன்னிசைகேட் டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி
ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.

திருச்சிற்றம்பலம்

தேவாரம் 7.61 திருவேகம்பம் (சுந்தரமூர்த்தி) (பண் - தக்கேசி)


ஆலந் தானுகந் தமுதுசெய் தானை 
ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ்
சீலந் தான்பெரி தும்முடை யானைச் 
சிந்திப் பாரவர் சிந்தையு ளானை
ஏல வார்குழ லாள்உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக் 
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

உற்ற வர்க்குத வும்பெரு மானை 
ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்
பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் 
பாவிப் பார்மனம் பரவிக்கொண் டானை
அற்ற மில்புக ழாள்உமை நங்கை 
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார்சடைக் கம்பனெம் மானைக் 
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் 
செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் 
காம னைக்கன லாவிழித் தானை
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை  
மருவி யேத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள்பி ரானைக் 
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

காமாட்சியம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பர நாதரே பெரியகம்பர்.

குண்ட லந்திகழ் காதுடை யானைக் 
கூற்று தைத்த கொடுந்தொழி லானை
வண்டலம் புமலர்க் கொன்றையி னானை 
வாள ராமதி சேர்சடை யானைக்
கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை 
கெழுமி யேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக் 
காணக் கண்அடி யேன்பெற்ற வறே.

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை 
வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னை
அல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை 
அரும றையவை அங்கம்வல் லானை
எல்லை யிற்புக ழாள்உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானை 
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

உருத்திரராற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு நல்லகம்பனென்றுபெயர்.

திங்கள் தங்கிய சடையுடை யானைத் 
தேவ தேவனைச் செழுங்கடல் வளருஞ்
சங்க வெண்குழைக் காதுடை யானைச் 
சாம வேதம் பெரிதுகப் பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு 
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளனைக் கம்பனெம் மானைக் 
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

விண்ண வர்தொழு தேத்தநின் றானை 
வேதந் தான்விரித் தோதவல் லானை
நண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை 
நாளும் நாம்உகக் கின்றபி ரானை
எண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக் 
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் 
சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்
பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் 
பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானை
அந்த மில்புக ழாள்உமை நங்கை 
ஆத ரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக் 
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் 
வாலி யபுரம் மூன்றெரித் தானை
நிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி 
நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்
பரந்த தொல்புக ழாள்உமை நங்கை 
பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பனெம் மானைக் 
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

எள்க லின்றி இமையவர் கோனை ஈச 
னைவழி பாடுசெய் வாள்போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை 
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி  
வெருவி ஓடித் தழுவவெளிப் பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் 
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

திருமாலாற் பூசிக்கப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு கள்ளக்கம்பனென்றுபெயர்.

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் 
பெரிய எம்பெரு மானென்றெப் போதுங்
கற்ற வர்பர வப்படு வானைக் காணக் 
கண்அடி யேன்பெற்ற தென்று
கொற்ற வன்கம்பன் கூத்தனெம் மானைக் 
குளிர்பொ ழிற்றிரு நாவலா ரூரன்
நற்ற மிழ்இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெ றிஉல கெய்துவர் தாமே.

திருச்சிற்றம்பலம்

அமைவிடம்:


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment